
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை பிரதமர் மோடி நேற்று (செவ்வாய் கிழமை) மாலை சந்தித்து பேசினார். இந்த உயர்மட்ட கூட்டத்தில் பல முக்கிய விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இந்த நிலையில், பிரதமர் மோடியை, புதுடெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து பேசினார்.
பஹல்காமில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொடூர கொலை செய்யப்பட்ட சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த வாரம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பகவத், பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கு கடுமையான பதிலடியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மக்களிடம் அவர்களின் மதம் என்னவென்று கேட்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதுபோன்ற விசயங்களை இந்துக்கள் ஒருபோதும் செய்வது கிடையாது. நம்முடைய மனங்களில் வலி உள்ளது. நாங்கள் கோபத்தில் இருக்கிறோம் என பேசினார். பிரதமரின் பெயரை குறிப்பிடாமல் பேசிய பகவத், நம்முடைய அண்டை வீட்டுக்காரர்களை நாம் ஒருபோதும் துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு தீங்கிழைப்பதோ கிடையாது.
ஆனால், சிலர் தீங்கானவர்களாக மாறினால், வேறு என்ன வழி? மக்களை பாதுகாக்க வேண்டியது மன்னனின் கடமை. மன்னன் தன்னுடைய கடமையை கட்டாயம் செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு பாடம் கற்பிப்பதும் அந்த கடமையின் ஒரு பகுதியாகும் என பேசினார்.