
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவருடைய மனைவி இந்திராவதி (வயது 50). இவர்களுடைய வீட்டுக்கு அருகே வசித்து வந்த ஆசாத் (வயது 30) என்பவருடன் இந்திராவதிக்கு தொடர்பு ஏற்பட்டது. அவருடன் சிரித்து, பேசி பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
தொடக்கத்தில் அக்கம்பக்கத்தினர் இதனை கண்டு கொள்ளவில்லை. இந்திராவதிக்கு, உறவுமுறைப்படி ஆசாத் பேரன் ஆவார். இந்நிலையில், 4 நாட்களுக்கு முன் இவர்களின் ரகசிய சந்திப்பு பற்றி அறிந்த சந்திரசேகர் சந்தேகம் அடைந்துள்ளார். இவர்களுக்கு இடையே உள்ள கள்ளத்தொடர்பு பற்றி அறிந்ததும் அதனை அவர் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தீர்வு காண போலீசுக்கும் சென்றுள்ளார். ஆனால், இருவரும் வயது வந்த பெரியவர்கள் என்றும், தங்களுடைய உறவுக்காரரை முடிவு செய்யும் உரிமை கொண்டவர்கள் என்றும் கூறி புகார் பதிவு செய்ய போலீசார் மறுத்து விட்டனர்.
இந்திராவதிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களை விட்டு விட்டு, காதலனான ஆசாத்துடன் ஓடிச்சென்ற இந்திராவதி, கோவிந்த் சாகிப் கோவிலில் வைத்து பேரனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் 7 முறை அக்னியை வலம் வந்து, உறுதிமொழி ஏற்று கொண்டனர். அவருக்கு ஆசாத் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்று கொண்டார்.
இந்திராவதி 2-வது மனைவி என்றும் வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்தது என்றும் அதனை இருவரும் பயன்படுத்தி கொண்டு உறவை வளர்த்துள்ளனர் என்றும் சந்திரசேகர் கூறியுள்ளார். கணவர் மற்றும் குடும்பத்தினரை ஆசாத்துடன் சேர்ந்து இந்திராவதி விஷம் வைத்து கொல்லவும் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ந்து போன சந்திரசேகர், இந்திராவதிக்கு, இந்து சமூக முறைப்படி இறந்து போனவர்களுக்கு 13-வது நாள் செய்யும் சடங்கை நடத்தவும் முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.