
டோக்கியோ,
ஜப்பானில் அடுத்த வருடம் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்த போட்டிகளில், கிரிக்கெட் மற்றும் கலப்பு தற்காப்பு கலை போட்டிகள் ஆகியன சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், அதனுடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
இதற்கான முறையான ஒப்புதல், நகோயா சிட்டி ஹாலில் நடந்த இயக்குநர்கள் வாரிய கூட்டத்தில் அளிக்கப்பட்டது. இதன்படி, ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டபோதும், சரியான இடம் எதுவென்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதேபோன்று, 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளிலும் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
2022-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், இடம் பெற்ற கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவிலும் இந்தியா வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது. இதில், ஆடவர் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரின்கு சிங், திலக் வர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.