
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 100 ஆண்டுகளை கடந்து சேவையாற்றிய பழைய ரெயில் பாலத்துக்கு அருகிலேயே இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது.
பழைய பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாலத்தில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக வந்து திறந்து வைக்கிறார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அனுராதபுரம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இன்று காலை 10.40 மணி அளவில் புறப்படுகிறார். பகல் 11.40 மணி அளவில் அவர் வரும் ஹெலிகாப்டர், மண்டபம் முகாம் தளத்தில் வந்து இறங்குகிறது.
பிரதமரை அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள். அங்கிருந்து, காரில் பகல் 12 மணி அளவில் பிரதமர் மோடி புறப்படுகிறார். சற்று நேரத்தில் பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதிக்கு வந்து, அங்கு அமைத்துள்ள மேடையில் இருந்தபடி புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்து, ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து பகல் 12.25 மணி அளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு 12.40 மணி அளவில் ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார். கோவிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு 1.15 மணியளவில் கோவிலில் இருந்து வெளியே வருகிறார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு 1.30 மணி அளவில் வருகிறார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசுகிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று ராமேசுவரம் கோவியிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதசுவாமி கோவிலில் இன்று காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்றும், இன்று பிற்பகல் 3.30 முதல் தரிசனம் செய்ய, தீர்த்தத்தில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.