
மும்பை,
வக்பு திருத்த மசோதாவை அமல்படுத்திய பிறகு, பா.ஜனதா தற்போது கிறிஸ்தவர்கள், சமணர்கள், பவுத்தர்கள் மற்றும் இந்து கோவில்களின் நிலங்கள் மீதும் கண்வைத்துள்ளதாக உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார். உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு பிரிவாக இருக்கும் சிவ சஞ்சார் சேனா தொடக்க விழாவில் பேசியதாவது:-
பா.ஜனதா 45-வது நிறுவன தினத்தை கொண்டாடும் வேளையில், ராமரின் வழியில் நடக்க முயற்சி செய்யவேண்டும். வக்பு சட்டத்திற்கு பிறகு அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள், சமணர்கள், பவுத்தர்கள் மற்றும் இந்து கோவில்களின் நிலத்தின் மீதும் பா.ஜனதா கண்வைத்துள்ளது. இந்த நிலங்களை அவர்கள் தங்கள் தொழில் அதிபர் நண்பர்களுக்கு வழங்குவார்கள். பா.ஜனதாவுக்கு எந்த சமூகத்தின் மீதும் அன்பு இல்லை.இதை அவர்கள் பகிரங்கப்படுத்தியுள்ளனர். அனைவரும் தங்கள் கண்களை திறந்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.