
சினிமாவில் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய சமுத்திரகனி, தனது நண்பர் சசிகுமார் இயக்கத்தில் உருவான 'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலமாக நடிகர் ஆனார். தற்போது நடிகராக தமிழிலும், தெலுங்கிலும் அசத்தி வருகிறார். மேலும் சமுத்திரகனி 'நாடோடிகள்', 'போராளி', 'நிமிர்ந்து நில்', 'அப்பா' போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இதற்கிடையில் சமுத்திரகனி தனது சினிமா அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், 'அப்பா', 'சாட்டை' போன்ற திரைப்படங்கள் உடனடியாக ரசிகர்களிடம் சென்று சேர்ந்து விடாது. பெரிய நடிகர்களின் படம் என்றால் ரசிகர்கள் முதல் காட்சிக்கு முண்டியடிப்பார்கள். ஆனால் தரமான, நல்ல படங்களுக்கு வருவது கிடையாது.
இந்த மாதிரியான படங்களை தாமதமாக டி.வி.யில் பார்த்துவிட்டு 'நல்லாதான் இருக்கு' என சொல்லிவிட்டு போய்விடுவார்கள். ஆனால், இது போன்ற படங்களுக்கு பின்னால் இருக்கும் உழைப்பு மிகப்பெரியது. கிட்டத்தட்ட நான் 7 ஆண்டுகள் சேர்த்து வைத்திருந்த காசை வைத்துதான் 'அப்பா' படத்தை எடுத்தேன். ஆனால், படம் எனக்கு நஷ்டத்தை கொடுத்தது என்பதுதான் உண்மை, என்று கூறினார்.