
புதுடெல்லி,
2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் யூனியன் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ரஷியாவின் இந்த வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார். இதனை ரஷியாவின் அதிபருக்கான பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி ரஷியாவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மாஸ்கோவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனை அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தி உள்ளன.