பிப்.14, 15 தேதிகளில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2 days ago 2

பெங்களூரு: கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஆபரணங்களை பிப். 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்துகளை ஏலம் விட வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எச்.ஏ.மோகன் கர்நாடக மாநில கருவூலத்தில் உள்ள ஆபரணங்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நில ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் 2024 மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் ஒப்படைக்க வேண்டும். சொத்து குவிப்பு வழக்கிற்காக கர்நாடக அரசு செய்த செலவு தொகை ரூ5 கோடியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று கடந்த 2024 பிப்ரவரி 19ம் தேதி தீர்ப்பளித்தார்.

இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்துள்ள அசையும் சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றமும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து அவர்களது மனுவை ஜன.13ம் ேததி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று நீதிபதி எச்.வி.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு வக்கீல் கிரண்ஜவுளி மற்றும் உதவி வக்கீல் சாஷ்வத், தமிழ்நாடு லஞ்சஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் எஸ்பி புகழ்வேந்தன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது ஜனவரி 13ம் தேதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை அரசு தரப்பு சிறப்பு வக்கீல் நீதிபதியிடம் வழங்கினார். அதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக மாநில கருவூலத்தில் உள்ள ஆபரணங்கள் மற்றும் நில ஆவணங்களை வரும் பிப்ரவரி 14 மற்றும் 15 தேதிகளில் தமிழ்நாடு அரசிடம் இதே நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

அதை பெற்று கொள்ள தமிழ்நாடு அரசில் இணை செயலாளர் பதவியில் இருக்கும் அதிகாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி, ஆபரண மதிப்பீட்டாளர் ஆகியோரை அழைத்து வர வேண்டும். இது தவிர போட்டோ மற்றும் வீடியோகிராபர், ஆபரணங்கள் கொண்டு செல்ல 6 இரும்பு பெட்டிகள், பாதுகாப்பாக கொண்டு செல்ல வாகனம், போலீசார் ஆகியோர் வர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பி புகழ் வேந்தன் ஏற்று கொண்டார்.

ஒட்டியாணமே ஒரு கிலோ
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மொத்தம் 27 கிலோ தங்கம், வைர ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது மொத்தம் 468 பொருட்களாக உள்ளது. இதில் எண் 192ல் மட்டும் 1.44 கிலோ ஒட்டியாணம் உள்ளது. இதில் 2,289 வைர கற்கள், 18 மரகதம், 9 மாணிக்கம் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இது தவிர சொத்து குவிப்பு வழக்கில் லெக்ஸ் பிராபர்ட்டீஸ், சிக்னோரா என்டர் பிரைசஸ், மெடோ ஆக்ரோபார்ம், ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ், ரிவர்வே ஆக்ரோ மற்றும் இந்தோ டோத கெமிக்கல் ஆகிய 6 நிறுவனங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,526 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிப்.14, 15 தேதிகளில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article