செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

2 hours ago 1

செங்கல்பட்டு, பிப்.1: செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் பயிர், பயிறு வகைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி அழிக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய தாலுகாவில் விவசாய நிலங்கள் உள்ளன. மொத்தமாக மாவட்டத்தில் 1 லட்சத்தது 60 ஆயிரத்து 537 ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களில் நெல் பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன. இதில், மதுராந்தகம், செய்யூர் தாலுகாவில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. அதனால், இப்பகுதி விவசாயத்தை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அருகில், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய வனச்சர பகுதிகளில் காப்புக்காடுகள் உள்ளன.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 42 ஆயிரத்து, 650 ஏக்கர் பரபரப்ளவில் வனப்பகுதி உள்ளது. இங்கு, மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்டவை அதிகமாக உள்ளன. இதனால், கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இவற்றின் இன பெருக்கம் அதிகளவில் உள்ளதால், இவற்றுக்கு வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்கமல் விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வருகின்றன. இவை அங்கு விவசாயி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், வேர்கடலை, கரும்பு, தர்பூசணி ஆகியற்வறை உண்ணுகின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் நெல், வேர்கடலை, தர்ப்பூசணி உள்ளிட்ட பயிர்களை தின்று அழிப்பதுடன் கடுமையாக சேதப்படுத்துகின்றன. மேலும், நடவுக்கு நாற்று விடப்பட்டுள்ள நாற்றங்கால் பகுதியில் பயங்கர சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், சுமார் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன என விவசாயிகள் கடும் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் விவசாயி நிலங்களில் சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய பட்டங்களில் நெல், உளுந்து, காராமணி உள்ளிட்ட பயிர் மற்றும் பயறு வகைகளை விவசாயிகள் பயிரிட்டும், அறுவடையும் செய்து வருகின்றனர்.

எனவே, பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தனியாக குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என வனத்துறையிடம் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பயிர்களை கட்டுப்பன்றிகள் சேதப்படுத்துகின்றன. அவற்றை புகைப்படம் எடுத்து கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மைத்துறை அலுவலர்கள் வனத்துறையினருக்கு சான்றிதழ் அளிக்கின்றனர். அதன் பிறகே வனத்துறையினர் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குகின்றனர். இதற்கு பதில் பயிரிடப்பட்டுள்ள நேரங்களில் வனத்துறையினர் குழு அமைத்து, காட்டுபன்றி உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும் என விவசாய நலன் காக்கும் கூட்டங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்மொன கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டும் இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் வனத்துறையினர் எடுக்கவில்லை. இந்த உத்திரவை வனத்துறையினர் செயல்படுத்த வேண்டும்’ என்றனர்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article