திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கு ஊரக நல அலுவலர்களுக்கு சிறை தண்டனை: செங்கை, காஞ்சி நீதிமன்றங்கள் தீர்ப்பு

3 hours ago 1

செங்கல்பட்டு,பிப்.1: திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில், ஊரக நல அலுவலர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் நீதிமன்றங்கள் அதிரடி தீர்ப்பபு வழங்கின. திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகாவில் உள்ள காழியூர் கிராமத்தை சேர்ந்த கோபால். இவரது மகன் ஸ்ரீதர் என்பவர் தனது அக்கா மகள் தேவி என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு முன்பே தேவியின் தந்தை ரங்கநாதன் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அரசால் வழங்கப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ₹20 ஆயிரம் நிதியுதவி பெற வேண்டி அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்திருந்தார். அது சம்மந்தமாக கடந்த 2010ம் ஆண்டு அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊரக நல அலுவலர் ஜோயல்பத்மினி என்பவரை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அப்போது, ஜோயல் பத்மினி உங்கள் மனைவிக்கு திருமண நிதியுதவிக்கான காசோலை வந்திருப்பதாகவும், அதனை வழங்குவதற்காக 850 ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் எனவும் அந்த தொகையை 13.5.2010ம் தேதி தனது அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், லஞ்ச பணம் கொடுக்க விரும்பாத ஸ்ரீதர் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புபிரிவு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், கடந்த 13.5.2010ம் தேதி அன்று காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண் காண்காணிப்பு பிரிவு அலுவலர்களால் வழக்கு பதிவு செய்து அன்றைய தினமே பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். ஸ்ரீதர் என்பவரிடம் இருந்து லஞ்சமாக பணம் 850 ரூபாயை செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (மகளிர்) ஊரக நல அலுவலர் ஜோயல் பத்மினி என்பவர் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டு ஜோயல்பத்மினி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் புலன் விசாரணை முடித்து ஜோயல்பத்மினி மீது செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்தொடர்ந்து நடைபெற்று வந்தது.இறுதி கட்ட விசாரணைக்கு வந்த இவ்வழக்கினை விசாரித்த செங்கல்பட்டு தலைமை குற்றவில் நீதித்துறை நடுவர் மற்றும் தனி நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று முன்தினம் ஜோயல்பத்மினி என்பவரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பூதேரிபகண்டை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர், தனது தங்கையின் மகள் செல்வி திருமணத்திற்கு கடந்த 2008ம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருமண திட்டத்தில் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அம்மனு சம்மந்தமாக அவ்வலுவகத்தில் பணிபுரிந்த ஊரக நல அலுவலர் சிவகாமியை அணுகி கேட்டபோது, மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள 1000 ரூபாய் தனக்கு லஞ்சமாக தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பம் இல்லாத நடராஜன், இதுகுறித்து காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில், கடந்த 2008, டிச.19ம்தேதி வழக்குப்பதிவு செய்து, லஞ்சப்பணம் 1000 ரூபாய் வாங்கியபோது, ஊரக நல அலுவலர் சிவகாமி கைது செய்யப்பட்டார்.

இந்த, வழக்கில் புலனாய்வு முடிக்கபட்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் தனி நீதிபதி வசந்தகுமார் முன்பாக நடந்து வந்தது. இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நேற்று முன்தினம் அப்போது ஊரக நல அலுவலராக பணிபுரிந்த சிவகாமி குற்றவாளி எனக்கூறி ஊழல் தடுப்பு சட்டம் பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ₹10 ஆயிரம் அபராதம் மற்றும் பிரிவு 13ன் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, அபராதம் ₹10 ஆயிரம் என மொத்தம் அபராதம் ₹20 ஆயிரம் எனவும், 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

The post திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கு ஊரக நல அலுவலர்களுக்கு சிறை தண்டனை: செங்கை, காஞ்சி நீதிமன்றங்கள் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article