
சென்னை,
சின்னதிரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி. இவர் பிரஜுனுடன் நடித்த சின்ன தம்பி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.தொடர்ந்து, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்றார். அப்போது இந்நிகழ்ச்சியின் பங்கேற்ற சக போட்டியாளரான நடன கலைஞர் அமீருடன் நட்பு ஏற்பட்டது. இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது பாவனியை ஒருதலைபட்சமாக அமீர் காதலித்து வந்தார்.

பிக் பாஸ் வீட்டில் அமீரின் காதலை ஏற்காத பாவனி, வெளியே வந்தவுடன் இவர்களின் நட்பு காதலாக மாறியது.தொடர்ந்து, 3 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்த நிலையில், இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்தில் நடித்து இருந்தனர். சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர். நடிகை பாவனி சமீபத்தில் 'ஓம் காளி ஜெய் காளி' என்ற இணையத் தொடரில் நடித்திருந்தார். விமல் உடனான பாவனியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இருவரும் காதலித்து வந்தநிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பாவனி தனது இன்ஸ்டாகிராமில், அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு திருமண தேதியை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அமீர் - பாவனி ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். பிரியங்காவும் அவரது கணவரும் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். இது குறித்த படங்களை அமீரும் பாவனியும் சமூக வலைதளப் பங்கங்களில் பகிர்ந்துள்ளனர். அமீர் - பாவனிக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.