
புதுடெல்லி,
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இந்த விவகாரத்தில் சிறப்புக்குழு விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. அதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்த நிலையில், மீண்டும் இது குறித்து சாடியுள்ளார்.
டெல்லியில் நடந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் ஜெகதீப் தன்கர் பேசியதாவது:- நீதிபதிக்கு பணம் கிடைத்த வழி, அதன் ஆதாரம், அதன் நோக்கம், இது நீதித்துறை அமைப்பை மாசுபடுத்தியதா? பெரிய சுறாக்கள் யார்? போன்றவற்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இவை குறித்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. விசாரணை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.