
லக்னோ,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் - மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அதிரடியாக விளையாடிய மார்ஷ் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பண்ட் 7 ரன்களில் நடையை கட்டினார்.
சிறப்பாக ஆடி வந்த மார்க்ரம் 61 ரன்களில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆயூஷ் பதோனி 3 ரன்களில் அவுட்டானார். இறுதி கட்டத்தில் நிக்கோலஸ் பூரன் (45 ரன்கள்) அதிரடியாக விளையாடி லக்னோ வலுவான நிலையை எட்ட உதவினார். அவர் இறுதி ஓவரில் ரன் அவுட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் ஆகாஷ் தீப் சிக்சர் அடித்து அணி 200 ரன்களை எட்ட உதவினார். ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக எஷான் மலிங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அதர்வா டெய்ட் 13 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா எதிரணியின் பந்து வீச்சை வெளுத்து கட்டினார். 18 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்த அபிஷேக் ஷர்மா 59 ரன்களில் (20 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.
அடுத்து வந்த வீரர்களும் கணிசமான பங்களிப்பை அளித்ததால் சிரமமின்றி ஐதராபாத் அணி இலக்கை அடைந்தது. இஷான் கிஷன் 35 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களிலும் அவுட்டாகினர். காமிந்து மென்டிஸ் 32 ரன்கள் எடுத்திருந்தபோது காயத்தால் பாதியில் பெவிலியன் திரும்பினார்.
இந்த நிலையில் ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அனிகெட் வர்மா (5 ரன்கள்), நிதிஷ்குமார் ரெட்டி (5 ரன்கள்) களத்தில் இருந்தனர். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட ஐதராபாத்துக்கு இது 4-வது வெற்றியாகும்.
கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களம் கண்ட லக்னோ அணி இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த அணிக்கு இது 7-வது தோல்வியாகும். இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப்சுற்று இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.