வேலூர், மார்ச் 20: பிஎம்ஏஒய்-யூ நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு அதிகரிக்குமா? என வேலூர் எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். பிஎம்ஏஒய்-யூ நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு யூனிட்டுக்கு நிதியுதவிக்கான ஒன்றிய அரசின் பங்கை அதிகரிக்குமா? என வேலூர் எம்பி கதிர்ஆனந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ராஜாங்க அமைச்சர் தோக்கன் சாஹு எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் தகுதியான நகர்ப்புற பயனாளிகளுக்கு அடிப்படை குடிமை வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குவதற்காக கடந்த 2015ம் ஆண்டு முதல் பிஎம்ஏஓய்-யூ திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு உதவியை வழங்குகிறது. வட்டி மானியமாக ஒரு வீட்டிற்கு ரூ.2.67 லட்சம் வரை முன்பண மானியம் வழங்கப்பட்டது.
நிதியுதவி முறை மற்றும் செயல்படுத்தல் முறையை மாற்றாமல் அனுமதிக்கப்பட்ட வீடுகளை முடிக்க இத்திட்டம் இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் கடந்த 3ம் தேதி வரை 6.80 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.185.30 கோடி மத்திய நிதியுதவி உறுதி செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வீடுகளில் 6.61 லட்சம் வீடுகளில், 5.98 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடு கட்டப்பட்டு வருகிறது. பிஎம்ஏஒய்-யூ 2.0 திட்டத்தில் 6.75 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 65 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பிஎம்ஏஒய்-யூ வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கு அதிகரிக்குமா? வேலூர் எம்பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் appeared first on Dinakaran.