பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி பழ.நெடுமாறன் வழக்கு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு

3 hours ago 2

சென்னை: பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரி உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் அளித்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலாவதியான தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரக்கோரி உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் 2022ம் ஆண்டு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், காவல்துறை அளித்த எதிர்மறை அறிக்கை காரணமாக பாஸ்போர்ட் நிராகரித்தாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த அறிக்கை தங்களுக்கு அளிக்கப்படவில்லை. குற்ற வழக்கை காரணம் காட்டி பாஸ்போர்ட்டை நிராகரிக்க முடியாது என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எஸ்.ஜெயகணேசன், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக தமிழக மக்கள் இருக்குமாறு பழ.நெடுமாறன் பேசியது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இது இலங்கை உடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். விண்ணப்பதாரர் வெளிநாட்டுக்கு சென்றால் அந்த நாட்டுடன் இந்தியாவுக்கு உள்ள நட்புறவு பாதிக்கப்படும் என்று பாஸ்போர்ட் அலுவலர் கருதியதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று கூறினார். மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் வெளிநாடு சென்றால் நாட்டின் பாதுகாப்பு எப்படி பாதிக்கப்படும் என்பது குறித்து பாஸ்போர்ட் அதிகாரி எந்த காரணத்தையும் விளக்கவில்லை. எனவே, விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இரண்டு வாரங்களில் பழ.நெடுமாறன் பாஸ்போர்ட் அதிகாரியிடம் விளக்கம் அளிக்க வேண்டும். அவரது விளக்கத்தை பெற்ற பின்னர் 3 வாரங்களில் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்க வேண்டும் என்று பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி பழ.நெடுமாறன் வழக்கு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article