பாஷிகாபுரம்-அழிஞ்சிவாக்கம் இடையே இருள் சூழ்ந்து காணப்படும் மேம்பாலம்: மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

4 weeks ago 6

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, பாஷிகாபுரம்-அழிஞ்சிவாக்கம் இடையே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் மீது மின் விளக்குகள் எரியாததால், மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி பாஷிகாபுரம்- அழிஞ்சிவாக்கம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில், அழிஞ்சிவாக்கம், திருக்கண்டலம், பூரிவாக்கம், பெருமுடிவாக்கம், சேத்துப்பாக்கம், பாஷிகாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கனி மற்றும் பூக்களை வியாபாரத்திற்கு சென்னை, செங்குன்றம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்ல வேண்டுமானால் மிகுந்த சிரமத்துடன் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்லும் நிலை இருந்தது.

இதனால், அஞ்சிவாக்கம்-பாஷிகாபுரம் இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட அப்பகுதி மக்கள், விவசாயிகள் நீண்ட நாளாக போராடி வந்த நிலையில், அரசு மேம்பாலம் கட்டி முடித்து அந்த பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால், 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் செங்குன்றம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மேம்பாலத்தை பயன்படுத்தினர். ஆனால், மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை.

இதனால், மேம்பாலம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், அப்பகுதியில் விபத்து மற்றும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பாலத்தின் இருபுறங்களில் உள்ள நுழைவு வாயில் மற்றும் நடைபாதையில் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு, நுழைவு வாயில்களை சூழ்ந்திருக்கும் புதர்களை அகற்றியும், பாலத்தில் மின் விளக்குகள் எரிவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பாஷிகாபுரம்-அழிஞ்சிவாக்கம் இடையே இருள் சூழ்ந்து காணப்படும் மேம்பாலம்: மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article