பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் கண்டனம்

9 hours ago 3

சென்னை: பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்படியாவது திமுகவின் பெயரை சேர்த்துவிட வேண்டும் எனும் இழிவான நோக்கத்தோடு தொடர்ந்து யார் அந்த சார்? என வதந்தி அரசியலை நடத்தி வந்தார் பழனிசாமி. அற்பத்தனமான புத்திக்கு இப்பொழுது விடை கிடைத்துவிட்டது, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் அல்ல, அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவிய அதிமுக 103வது வட்டச்செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் சிறுமியின் புகாரை வாங்காமல் இழுத்தடித்த காவல் ஆய்வாளர் ராஜி என்பவரையும் தமிழ்நாடு அரசின் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. தனது கட்சியை சேர்ந்தவரைக் காப்பாற்ற பழனிசாமி யார் இந்த சார்? என நடத்திய கபட நாடகம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தொடங்கி ராமேஸ்வரம் குளியலறை கேமரா வைத்த காமுகன், அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றவாளி “சார்களின்” சரணாலயம் அதிமுக என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியிருக்கிறது.

‘அண்ணா, அண்ணா விட்டுடுங்க அண்ணா’ என்று பொள்ளாச்சி பெண்கள் கதறிய குரலில் தமிழ்நாடே அதிர்ந்து போனது அந்த வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க தனது கள்ளக்கூட்டாளி பாஜவோடு சேர்ந்து அதிமுக செய்த காரியங்கள்தான் இன்றும் அந்தக் கொடுமைக்கான நீதியை பெற்றுத்தர தாமதத்தை ஏற்படுத்தி உண்மை குற்றவாளிகளை காப்பாற்றி வருகிறது. இனியும் யார் அந்த சார்? என்று பச்சைப் பொய் பழனிசாமி கேட்க விரும்பினால் கண்ணாடியைப் பார்த்துதான் கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article