*தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனை
பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவல் தீவிரமடைவதை தடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா, கூடுதல் இயக்குநர் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர். ரீத்தா, மாவட்ட மருத்துவ அதிகாரி வித்யா, மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பாலக்காடு மாவட்டத்தில் மன்னார்க்காடு தாலுகா தச்சநாட்டுக்கரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 38 வயது பெண் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பெரிந்தல்மன்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் கோழிக்கோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 143 பேரினை தனிமைப்படுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இவர்களது ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர். தச்சநாட்டுக்கரா கிராமப் பஞ்சாயத்தில் 7, 8, 9, 11 ஆகிய வார்டுகளில் வசிக்கின்ற மக்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், கரிம்புழா கிராமப்பஞ்சாயத்தில் 17, 18 ஆகிய இரண்டு வார்டுகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் வீடுவீடாக சென்று அவர்களது நோய் அறிக்கைகள் ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர். பாலக்காடு மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு நிபா வைஸ் நோய் குறித்து சுகாதாரத்துறையின் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வசிப்பவர்கள் என் 95 மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் எனவும்,கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், காய்ச்சல், இருமல், தலைவலி, மூச்சுத்திணறல்,மயக்கம், மனநிலை பாதிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறை ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிபா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க அனைத்து உயர் அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுகளிலும், நிபா வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் 3 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் 24 மணிநேரமும் பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை நிர்வாகம் கூடுதல் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஆலோசாணை கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிபந்தனைகளை தெரிவித்தார்.
The post பாலக்காட்டில் நிபா வைரஸ் பரவல் தீவிரம் 143 பேர் தனிமை படுத்தப்பட்டனர் appeared first on Dinakaran.