இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வழிகாட்டுதலின்படி எதிர்வரும் ஆடிப்பட்ட சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலம் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் வேளாண்மை அறிவியல் மையம் மூலம் 180 கிராமங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் விவசாயம் சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், காரிப் பருவ பயிர்களுக்கான புதிய ரகங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் மத்திய மாநில அரசின் வேளாண் திட்டங்கள், பயிர் மேலாண்மை, நவீன விவசாயத் தொழில்நுட்பங்கள், இயற்கை வேளாண்மை, சமச்சீர் உரப் பயன்பாடு, மண்வள அட்டையின் அடிப்படையில் பயிர் தேர்வு செய்தல், கால்நடை மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அசகளத்தூர், புதுப்பாலப்பட்டு, கனகூர் ஆகிய கிராமங்களில் சர்வதேச சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் மேற்கண்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அவற்றை நடவு செய்து பராமரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. 3 கிராமங்களிலும் மரம் நடும் விழாவும் நடத்தப்பட்டது.
பிரச்சார இயக்கம் நடைபெற்ற கிராமங்களில் ட்ரோன் மூலம் நானோ டி.ஏ.பி, நானோ யூரியா மற்றும் பூச்சி மருந்து தெளிப்பதற்கான நேரடி செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன் அடைந்தனர். மேலும் விவசாயிகள் விவசாயம் சார்ந்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் விமலாராணி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஷர்மிளா பாரதி, முருகன், முரளி, சென்னை மத்திய உவர் நீர் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் மகேஷ், வினய்குமார், குமாரராஜா மற்றும் கால்நடைக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் புஷ்பநாதன், நளினி, நித்தியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களின் துறை சார்ந்த தொழில்நுட்பத் தகவல்களை விளக்கினர்.
The post உழவர்களுக்கு நேரடி செயல் விளக்கம்! appeared first on Dinakaran.