மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் வருகை, புறப்பாடு அதிகளவில் உள்ளது. விசேஷ காலங்களில் ரயில் மற்றும் பஸ்களில் இடம் கிடைக்காதவர்களில் சிலர், விமான போக்குவரத்தை நாடகூடும். அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 19,38,194 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதில் உள்நாட்டு பயணிகள் 14,20,283 பேர், சர்வதேச அளவில் பயணிகள் 5,17,194 பேர் பயணம் செய்துள்ளனர். அதே நேரத்தில் 12,958 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அதில் உள்நாட்டு விமானங்கள் 9,953, சர்வதேச விமானங்கள் 3,005 இயக்கப்பட்டுள்ளன. இதில், புறப்பாடு பயணிகள் 9,27,003 பேர், புறப்பாடு விமானங்கள் 6,476 என்றும் வருகை பயணிகள் 10,11,191 பேர், வருகை விமானங்கள் 6,482 எனவும் தெரியவந்துள்ளது. இவைகளில் குறிப்பாக நாளொன்றுக்கு வருகை, புறப்பாடு என 64,600 பேர் பயணம் செய்துள்ளனர்.
அதைப்போல் வருகை, புறப்பாடு என ஒரு நாளைக்கு 432 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த பயணிகளில், சர்வதேச விமானங்களை பொருத்தமட்டில், துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும், உள்நாட்டு விமானங்களில் மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா, அந்தமான், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அதிகளவில் பயணிகள், பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் குறைவாக இருந்துள்ளது. அதாவது 20,57,848 பேர் பயணம் செய்துள்ளனர். 13,449 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. மே மாதத்தை விட, ஜூன் மாதத்தில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை குறைவுக்கு காரணம் பற்றி விசாரித்தபோது சென்னை விமான நிலையம் தரப்பில் கூறியதாவது: மே மாதம் முழுவதும், கோடை விடுமுறை மாதம். எனவே சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தன.
சென்னையில் இருந்து வெளிநாடுகள், வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள், வெளிநாடுகள், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள், பெருமளவு அதிகரித்து இருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தன. அதனால் பல விமானங்கள், கோடை சிறப்பு விமானங்களாக இயக்கப்பட்டன. ஆனால் ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து, கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
சென்னை விமான நிலையத்தை பொருத்தமட்டில், சில நேரங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதும், வழக்கமான ஒன்றுதான். இனி செப்டம்பர், அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டால், தொடர்ச்சியாக பண்டிகை காலங்கள் வரும். அப்போது தொடர் விடுமுறை விடப்படும்பட்சத்தில் மீண்டும் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சென்னையில் விமான நிலையத்தில் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூனில் பயணிகள், விமானங்கள் வருகை, புறப்பாடு குறைந்தது appeared first on Dinakaran.