திருவனந்தபுரம்: மாணவர்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேரளாவில் இன்று தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மாணவர்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும். இ செலான் மூலம் அநியாயமாக வசூலிக்கும் அபராதத்தை போக்குவரத்து துறை நிறுத்த வேண்டும். ஜிபிஎஸ், வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்பட விலை உயர்ந்த உபகரணங்களை பஸ்களில் மட்டும் பொருத்த கட்டாயப்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 8 (இன்று) மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று கேரள போக்குவரத்து துறை ஆணையாளர் நாகராஜு பாலக்காட்டில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து இன்று காலை முதல் தனியார் பஸ் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் பாலக்காடு, கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். தனியார் பஸ்கள் ஓடாத பகுதிகளில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கி வருகிறது.
The post கேரளாவில் இன்று தனியார் பஸ் ஸ்டிரைக் appeared first on Dinakaran.