பார்டர்-கவாஸ்கர் டிராபி; இந்த 3 வீரர்களை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல யோசித்து வருகிறோம் - ரோகித் சர்மா

4 weeks ago 8

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை மீண்டும் ஒருமுறை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது. அதேவேளையில் ஏற்கனவே இந்திய அணியிடம் இரண்டு முறை சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி இம்முறை இந்திய அணியை பழிதீர்க்க காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தற்போது ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மயங்க் யாதவ், ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோரை ஆஸ்திரேலிய நாட்டிற்கு அழைத்து செல்ல திட்டம் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

மயங்க் யாதவ் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆனாலும் அவர் அண்மையில் காயம் அடைந்து இருப்பதால் அவரை பக்குவமாக கையாள வேண்டும். அதன் காரணமாக அவரை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அதேபோன்று நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோரும் திறமையான வீரர்கள் தான்.

ஆனாலும் அவர்களிடம் டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் குறைவாக உள்ளது. அதன் காரணமாகவே அவர்களை மாற்று வீரர்களாக கொண்டு சென்று, இந்திய அணியுடன் இணைந்து பயணிக்க வைத்தால் நிச்சயம் பயிற்சியின் போது அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும். எனவே அவர்களை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல யோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article