பாராட்டு மணிமகுடம்

3 months ago 9

பெருமைக்குரிய இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, 4 நாட்கள் பயணமாக தமிழ்நாட்டின் கோவைக்கு வந்தார். நேற்று முன்தினம் ஊட்டி ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர், கோத்தர் உள்ளிட்ட 6 வகை பழங்குடியின மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அவர்கள் மத்தியில் பேசுகையில், நமது பிரதமரிடமும், அரசு அதிகாரிகளிடமும் பழங்குடி மக்களுக்கான கல்வி, சமூக மேம்பாடு, ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

இங்குள்ள தமிழ்நாடு அரசு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மாநில அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, ‘‘நான் நிறைய இடங்களுக்கு செல்லும் போது, அங்குள்ள பழங்குடி மக்களை சந்திப்பேன். நானே ஒரு பழங்குடியாக இருப்பதால், அந்த மக்களின் பிரச்னைகள் என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டில் பழங்குடியினர், பரிதாபகரமான நிலையில் தான் உள்ளனர்.

குறிப்பாக பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற ஒன்றிய அரசின் திட்டப்பலன்கள், பழங்குடியினரை சென்றடையவில்லை,’’ என்ற தனது ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளார். முதல் குடிமகளின் அரும்பாராட்டை பெற்றுள்ள தமிழக அரசு, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக சமூகநீதி சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, அனைத்து மாநிலங்களும் அறிந்த ஒன்று. இந்தவகையில் பழங்குடியின மக்கள் மேம்பாட்டுக்காகவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக அவர்களின் கல்விக்கும், சமூக மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் வகையில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதற்கு பழங்குடியின மாணவர்களை தொழில்முனைவோராக உயர்த்தியதே ஆகச்சிறந்த வரலாற்று சான்று. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிநடத்தும் தமிழ்நாடு அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை கடந்த 20.9.2023ல் வெளியிடப்பட்டது. அதில் பட்டியலின மற்றும் பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து, ரூ.80கோடி சிறப்புநிதியை ஒதுக்கீடு செய்தது. இதிலிருந்து 38 நிறுவனங்களுக்கு ரூ.55.20 கோடி பங்கு முதலீடுகள் வழங்கியுள்ளது.

இதன் மூலம் சென்னை மட்டுமன்றி சேலம், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியின மாணவர்களும் பயன் பெற்றுள்ளனர். பழங்குடியினர் என்ற குறியீடு ஒருபுறம் இருந்தாலும் இயந்திரவியல், வேளாண் தொழில்நுட்பம், ஊடகத்துறை, செயற்கை நுண்ணறிவு, மருத்துவ தொழில்நுட்பம், பசுமை எரிவாயு தயாரித்தல், இணையவழி வணிகம், உணவு மதிப்பு கூட்டுதல், விண்வெளித் தொழில் நுட்பம் என்று பல்வேறு துறைகளில், புத்தாக்க வணிக மாதிரிகளை கொண்டு அவர்கள் துவங்கிய நிறுவனங்கள் இயங்குவது மேலும் ஒரு தனிச்சிறப்பு.

இப்படி பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு, புத்தாக்க தொழில் வளர்ச்சியில் பழங்குடியின மலைவாழ் இளைஞர்களின் வாழ்வை மலரச்செய்துள்ளார் தமிழ் நிலத்தின் முதல்வர். இதற்காக பழங்குடியின மக்கள் முதல்வருக்கும், அரசுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பழங்குடியின சமூகத்தில் இருந்து, நாட்டின் முதல்குடிமகளாக உயர்ந்து நிற்கும் பெருமைக்குரிய ஜனாதிபதியின் பாராட்டு, நமது அரசுக்கு கிடைத்துள்ளது. இது சமூக நீதிக்கு சூட்டப்பட்ட மேலும் ஒரு மணிமகுடம் என்றால் அது மிகையல்ல.

The post பாராட்டு மணிமகுடம் appeared first on Dinakaran.

Read Entire Article