பாரம்பரிய நெல் ரகங்களில் பலன் அதிகம் தான்!

2 months ago 13

விவசாயம்தான் எங்களின் வாழ்வாதாரம். எங்கள் குடும்பம் வாழையடி வாழையாக விவசாயம் செய்து வருகிறது. எனக்குத் தெரிந்து தாத்தாவைத் தொடர்ந்து அப்பா, அப்பாவைத் தொடர்ந்து நான் என 3 தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். எனது மகனும் கல்லூரியில் படித்துக்கொண்டே விவசாயம் செய்து வருகிறார்’’ என தங்களின் குடும்பத்திற்கும், விவசாயத்திற்கும் உள்ள பந்தம் குறித்த தகவலோடு பேச ஆரம்பித்தார் கருணாநிதி. தர்மபுரி அருகில் உள்ள காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்தான் இந்த கருணாநிதி. தனது 6 ஏக்கர் நிலத்தில் நெல், காய்கறி என அனைத்தையும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் இவர், பாரம்பரிய ரகங்களைத் தேர்ந்தெடுத்தும் பயிரிட்டு வருகிறார். தர்மபுரியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் சரியாக 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவரது பண்ணைக்குச் சென்றோம். பசுஞ்சோலையாக காட்சியளித்த பண்ணையைச் சுற்றிக் காண்பித்தவாறு எங்களிடம் பேச்சைத் தொடர்ந்தார்.“எங்களுக்குச் சொந்தமாக 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. தற்போது 2 ஏக்கரில் நெல்லும், 2 ஏக்கரில் மஞ்சளும் சாகுபடி செய்கிறோம். மீதமுள்ள இடத்தில் பலவகையான காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். நெல்லைப் பொருத்தவரை தங்கசம்பா, ஆத்தூர் கிச்சிலி, கருப்புக்கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை, காட்டுயானம், சீரகசம்பா, தூயமல்லி, ஒட்டுக்கிச்சிலி என 15க்கும் அதிகமான பாரம்பரிய ரகங்களைப் பயிரிட்டு வருகிறேன். அதேபோல, காய்கறிப்பயிர்களையும் பாரம்பரிய ரகங்களாகப் பார்த்து பயிரிடுகிறோம். கத்தரியில் மட்டும் 10 வகைகள் உள்ளன. அதேபோல, வெண்டையில் 5 வகை, மிளகாயில் 3 வகை பயிரிடுகிறோம். பந்தல் காய்கறிகளில் வீரிய ரகம் மற்றும் பாரம்பரிய ரகத்தைப் பயிரிடுகிறோம். அனைத்து பயிர்களையும் இயற்கை முறையில்தான் சாகுபடி செய்கிறோம். நெல்லைப் பயிரிட்டு விதை நெல்லாகவும் விற்பனை செய்கிறோம். அரிசியாகவும் விற்பனை செய்கிறோம். காய்கறிகளைப் பொருத்தவரை தர்மபுரியில் நடைபெறுகிற இயற்கை மரபு சந்தையில் விற்பனை செய்கிறோம்.

இயற்கை முறையில் நெல்லை சாகுபடி செய்வதற்கு அடிஉரமாக சாணம் மற்றும் பலவகையான இலைகளை நிலத்தில் இடுவோம். பின்னர் நன்றாக உழுது நாற்றங்கால் அமைத்து, பயிர்களைப் பிடுங்கி நிலத்தில் நடவு செய்வோம். பாரம்பரிய ரக விதைகளை எங்கு வாங்குகிறோம் என்பதும் அந்த விதைகள் எந்த முறையில் அறுவடை செய்யப்பட்டது என்பதும் முக்கியம். எனது நிலத்தில் நானே இயற்கை முறையில் பயிரிட்டு அறுவடை செய்யும் நெல்மணிகளை விதைநெல்லாக மாற்றி பயன்படுத்துகிறேன். எனது நிலம் இயற்கை உழவுக்கு நன்கு பழக்கப்பட்டது என்பதால் இயற்கை முறை விவசாயம் எனக்கு நன்றாக கைகொடுக்கிறது. பூச்சித் தாக்குதலுக்கு வேப்பங்கொட்டைக் கரைசல், புழுத்தாக்குதலுக்கு இஞ்சிபூண்டு கரைசல், பயிர் ஊக்கியாக மீன் அமிலம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்ற கரைசல்களை நானே தயார்செய்து பயிர்களுக்கு கொடுத்து வருகிறேன். இந்தமுறை விவசாயத்தில் கிடைக்கும் பாரம்பரிய அரிசிகளை வாங்குவதற்கு தனிக்கூட்டமே இருக்கிறது. அவர்களுக்கு நான் நேரடியாகவே விற்பனை செய்கிறேன். அதேபோல், பாரம்பரிய ரகத்தில் ஏக்கருக்கு 30 மூட்டை நெல் கிடைத்தால், வீரிய ரகத்தில் 40 மூட்டை நெல் கிடைக்கும். ஆனால், வீரிய ரக நெல்லில் அதிகமாக கிடைக்கும் 10 மூட்டை நெல்லை பாரம்பரிய ரக நெல் விற்பனையில் எடுத்துவிடலாம். அதாவது வீரிய ரகத்தை விட பாரம்பரிய ரக அரிசி அதிக விலைக்கு விற்பனை ஆகும். எப்படி பார்த்தாலும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல வருமானத்தைத்தான் தருகின்றன’’ என மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார்.
தொடர்புக்கு:
கருணாநிதி 90476 70127.

தர்மபுரி மாவட்டத்தின் முன்னோடி விவசாயியாக இருப்பதால், 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தனது வயலிலே இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் எடுத்து வரும் கருணாநிதி, இடுபொருட்கள் தயாரிப்பில் இருந்து இயற்கை விவசாயத்தின் அத்தனை தரவுகளையும் மாணவர்களுக்கு விளக்குகிறார்.

இயற்கை முறையில் பாரம்பரிய ரக நெல்லை விதைத்து அறுவடை செய்வதன் மூலம் ஏக்கருக்கு சராசரியாக 30 மூட்டை நெல் கிடைக்கிறது. ஒரு மூட்டை 80 கிலோ எடை கொண்டது. 30 மூட்டை நெல்லில் இருந்து 20 மூட்டை வரை அரிசி கிடைக்கிறது. அதாவது ஏக்கருக்கு 1600 கிலோ அரிசி வரை கிடைக்கிறது. ஒரு கிலோ அரிசி ரூ.90க்கு விற்பனை செய்தால்கூட ஏக்கருக்கு ரூ.1,44,000 வருமானமாக கிடைக்கிறது

The post பாரம்பரிய நெல் ரகங்களில் பலன் அதிகம் தான்! appeared first on Dinakaran.

Read Entire Article