“பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம்” : தந்தை பெரியாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், கனிமொழி புகழஞ்சலி!!

3 weeks ago 4

சென்னை : தந்தை பெரியாரின் நினைவைப் போற்றுவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை வேப்பேரியில் பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அத்துடன் சென்னை வேப்பேரியில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்.

இதனிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “‘எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்’ என்னும் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று! ‘மானமும் அறிவும் தான் மனிதருக்கு அழகு’ என்பதை மானுடத்துக்கு உணர்த்த தனது இறுதி மூச்சு வரை தளராமல் உழைத்த தந்தை பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக் கொண்ட நாள்! சமூகநீதி, மதசார்பின்மை காக்க – மூடநம்பிக்கை ஒழிய அய்யா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.பெரியாரின் நினைவைப் போற்றுவோம்!”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், “சமூகத்தில் தென்படும் இழிநிலையைச் சகித்துக்கொள்ளாதவர் தந்தை பெரியார். உயர்வு தாழ்வற்ற சமநிலை மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளையே செலவிட்டுப் பரப்புரை செய்தவர். தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர்.கொண்ட கொள்கையை இறுதிவரை எடுத்தியம்பிய தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது வழிகாட்டுதல்களைக் கைக்கொள்வோம். பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட இனத்தின் எரிதழலாய் – கொள்கைப் பேரொளியாய் – பகுத்தறிவுச் சுடராய் – ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாய் – சமரசமற்ற போர்க்குரலாய், என்றென்றும் தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தன்னிகரற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று.அவரது கொள்கைத் தடியை கையிலேந்தி சாதி – மத – ஆதிக்க பிரிவினை சக்திகளை வேரறுப்போம், சமத்துவ சமூகம் படைப்போம்”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post “பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம்” : தந்தை பெரியாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், கனிமொழி புகழஞ்சலி!! appeared first on Dinakaran.

Read Entire Article