
சென்னை,
ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'மையல்'. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
மைனா படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த நடிகர் சேது இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். படத்தில் பிஎல் தேனப்பன் மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கல்வராயன் மலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள மையல் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது
மையல் படம் ஒரு சாதாரண அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலை நிறுத்தவும் பாதுகாக்கவும் சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவால் அவரது உண்மையான காதல் சிதைவடைவதை கதைக்களமாக எடுத்துக் கொண்டுள்ளதாக இயக்குநர் ஏழுமலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மனிதரின் கொந்தளிப்பான மனநிலையை படம் மையக்கதையாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, "இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். புதிய முயற்சியாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் பார்ப்பது போல இருந்தது. இந்தப் படம் அறிவால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினுக்கும் நம்ம வீட்டுப் பெண் போல அழகு உள்ளது. ஹீரோவுக்கும் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளது. சிறந்த டெக்னீஷியன்ஸ் தான் சிறந்த படிப்புகளை உருவாக்குகிறார்கள். உருவாக்குவது கடினம். அதை உடைப்பது எளிது. கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்தவர்களைத் தூண்டி விடுவது எளிது. முரண்பாடுகளை சரிசெய்தால் மட்டுமே வேலைகள் சரியாக நடக்கும். சங்கத்தில் பிரச்சினைகள் வரும்போது அதை சரிசெய்யாமல், அடுத்தடுத்து சங்கங்கள் தொடங்கிக் கொண்டே இருந்தால் கடைசி வரை பிரச்சினைகள் முடியாது. இது ஒரு எச்சரிக்கை மணி. அடுத்து எப்படி வேண்டுமானாலும் திருப்பி விடப்படலாம். இந்தப் படத்தின் டெக்னீஷியன்ஸ் தான் இந்தப் படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!". என்றார்.