
மதுரை,
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என போற்றி அழைக்கப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும்.
இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் முடிந்ததும், அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கும். இதில் முத்தாய்ப்பு நிகழ்ச்சி என்பது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகும்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடந்துவரும் நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்குமேல் தங்கப்பல்லக்கில் அதிர்வேட்டுகள் முழங்க புறப்படுகிறார். கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி வருகிறார். 494 மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறார். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கள்ளழகருடன் 39 தள்ளு வண்டி உண்டியல்களும் மதுரை வருகின்றன.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மூன்றுமாவடியில் மதுரை பக்தர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டங்களுடன், எதிர்சேவை செய்து அழகரை வரவேற்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
வைகையில் எழுந்தருள்கிறார்
நாளைமறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.45 மணிக்கு மேல் தங்கக்குதிரை வாகனத்தில் அமர்ந்து, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். இதற்காக தற்போது வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு, ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.
13-ந் தேதி தேனூர் மண்டபத்தில் சேஷ, கருட வாகனங்களில் எழுந்தருளி மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அன்று இரவு விடிய விடிய தசாவதார கோலங்களில் காட்சி தருவதும் நடைபெறுகிறது. 14-ந் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறுகிறது. சித்திரை திருவிழா நாயகரான அழகரை வரவேற்க மதுரையே திரள்கிறது.