*பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு “தமிழ் வார விழா“ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
“பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5ம்தேதி வரை ஒரு வார காலத்திற்கு “தமிழ் வார விழா“ கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவையில் அறிவித்தார்.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கலைப்பண்பாடு சுற்றுலாத் துறைகளின் சார்பில் மே-2 அன்று பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை மையப்படுத்தி, பள்ளிக் கல்வித்துறை வாயிலாக பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர், அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன.
மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடையே அலுவலக தமிழ்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கையெழுத்துப் போட்டிகள், தமிழ் புதினங்கள், கவிதை வாசிப்பு போட்டி, குறிப்பு எழுதுதல், வரைவு எழுதுதல் போன்ற பல்வேறு போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி கிருபா முதல் பரிசையும், காரை அரசு மேல்நிலைப் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி வாசினி இரண்டாம் பரிசையும், அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ராகுல் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
கவிதைப் போட்டியில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி 8ஆம் வகுப்பு மாணவர் மிதுன் முதல் பரிசையும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி 12ஆம் மாணவி பிரீத்தி 2ம் பரிசையும், பெரம்பலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவன் தேவசஹா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
கட்டுரைப் போட்டியில், எசனை அரசு மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி இளையரசி முதல் பரிசையும், சத்திரமனை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி சமாபேகம் 2ஆம் பரிசையும், கூத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவி கௌதமி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
இதேபோல அரசு அலுவலக பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில், கவிதை வாசிப்பு போட்டியில் முதல்பரிசை மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரவணன், இரண்டாம் பரிசை கூட்டுறவுத்துறையில் சார் பாதிவாளராக பணிபுரியும் சுகன்யா, மூன்றாம் பரிசை மாவட்ட கருவூல அலுவலகத்தில் கணக்கராக பணிபுரியும் அஜ்முதீன் ஆகியோர் பெற்றனர்.
கையெழுத்துப் போட்டியில் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பிரியதர்ஷினி முதல் பரிசையும், கருவூல அலுவலகத்தில் பணிபுரியும் சாலினி இரண்டாம் பரிசையும், வேப்பந்தட்டை அரசுப்பள்ளி ஆசிரியர் மணி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
இதேபோல அலுவலகக் குறிப்புகள் செயல்முறை ஆணைகள் தயார் செய்தல் போட்டியில் விஜயலட்சுமி முதல் பரிசையும், பிரபு இரண்டாம் பரிசையும், சுப்ரமணியன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று வழங்கினார். இதே போல கல்லூரி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரிகளிலேயே பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த தமிழ்வார விழா போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ்கள் appeared first on Dinakaran.