பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்து தொழிலாளி உயிரிழப்பு

2 months ago 10

கோவை,

கோவையை அடுத்த வடவள்ளி ஐ.ஓ.பி. காலனி ராஜேந்திரன் நகரில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றனர். இதில், ராேஜந்திரன் நகரில் நேற்று மாலை 4 மணி அளவில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க குழி தோண்டும் பணி நடைபெற்றது. இந்த பணியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அவருடைய மகன் கவுதம்(வயது20) மற்றும் சிலர் ஈடுபட்டு இருந்தனர்.

அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 10 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு மண்ணை அள்ளி மேலே குவித்து போட்டனர். அதன் மேல் நின்று கவுதம் பணிகளை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று மண் சரிந்ததால் அதன் மேல் நின்ற கவுதம் குழிக்குள் விழுந்தார். அவர் மேல் மண் சரிந்து விழுந்தது.

இதனால் கவுதம் மண்ணில் புதைந்தார். அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மண்ணை அள்ளி கவுதமை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில் வடவள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு கவுதமை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் மண்ணில் புதைந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article