சென்னை,
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நடிகை கஸ்தூரி இன்று சந்தித்துப் பேசினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை கஸ்தூரி கூறியதாவது:-
எனக்கு கடந்த நவம்பர் மாதம் நடந்த சர்ச்சையின்போது லண்டனில் இருந்த பாஜக தலைவர் அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எனக்கு நிறைய தைரியம் கொடுத்து, அறிவுரை வழங்கினார். அந்த நேரத்தில் என்ன பண்ணலாம் என்று கூறினார். அண்ணாமலை கூறியதில் பாதியளவுதான் நான் செய்தேன்.. அதற்குள் என்னை கைது செய்துவிட்டார்கள்.
என்னுடைய சோதனை காலத்தில் பக்க பலமாக இருந்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றியை நேரில் சொல்ல வேண்டும் என்பதற்காகதான் அவர் லண்டனில் இருந்து திரும்பி வந்ததும் இன்று சந்தித்து பேசினேன். இருவரும் முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அந்த விவாதம் இன்னும் முற்று பெறவில்லை; அதற்கான தொடர்ச்சி, மீட்ச்சி இருக்கிறது. முழுமையாக பேசி முடித்த பின்னரே அதுபற்றி கூறுகிறேன்.
இளையராஜாவே ஒரு கடவுள் தான். அவரே ஒரு கோவில் தான். இளையராஜாவை கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என பரவுன் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட பிரசாரங்களை வைத்து இன்னும் எவ்வளவு நாட்கள் தான் இந்த நாட்டில் ஏமாற்றுவார்கள்.
கருவறைக்குள் எந்த ஜாதியினரும் செல்ல முடியாது. பிராமணர்களாய் இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டும்தான் செல்ல முடியும். இளையராஜா கருவறைக்குள் செல்ல முயற்சி செய்யவே இல்லை. உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் இங்கே நில்லுங்கள் என்று சொல்கிறார்கள். அவரும் அங்கே நிற்கிறார். இதுதான் நடந்தது.
திமுகவின் ஆட்சியை அகற்றி ஒரு புதிய காற்று தமிழகத்தில் வீச வேண்டுமென்றால் எல்லோரும் சேர்ந்து ஒருமித்த பெரிய கூட்டணி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.