
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சுஜாதா (33 வயது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் செல்போனிலேயே அடிக்கடி சண்டை போட்டு கொண்டு இருந்துள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சுஜாதா மன வேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது சுஜாதா தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுஜாதா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக சுஜாதாவின் தந்தை கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.