குன்னூரில் மலை ரெயிலை வழிமறித்து நின்ற காட்டு யானை - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

3 hours ago 5

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் இந்த மலை ரெயிலில் பயணித்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இதற்கிடையே குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது.

இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையோரம் உள்ள மரம், செடிகள் பசுமை நிலைக்கு திரும்பி உள்ளது. மேலும் சீசன் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள பலா மரங்களில் பலாப்பழம் காய்த்து தொங்குகிறது. இதனால் சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டமாக குன்னூருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளன. இதில் சில காட்டுயானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில் பாதையை கடந்து, செல்வதுமாக உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் சுற்றுலா பயணிகளுடன் சென்றது. குன்னூர் மரப்பாலம் பகுதியில் வந்தபோது தண்டவாளத்தில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது.

இதனை பார்த்த மலை ரெயில் பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். பின்னர் ஹாரன் அடித்து தண்டவாளத்தில் இருந்து காட்டு யானையை விரட்ட முயன்றார். ஆனால் காட்டு யானை சுமார் 10 நிமிடம் தண்டவாளத்தில் மலை ரெயிலை வழிமறித்தபடியே நின்றது. இதையடுத்து காட்டுயானை தண்டவாளத்தில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் மலை ரெயில் குன்னூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

இதற்கிடையே காட்டு யானை தண்டவாளத்தில் மலை ரெயிலை வழிமறித்து நிற்பதை அறிந்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனப்பகுதிக்குள் காட்டு யானை சென்றபிறகுதான் நிம்மதி அடைந்தனர். இதில் சிலர் தங்களது செல்போனில் காட்டுயானையை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அவை வைரலாகி வருகிறது.

Read Entire Article