
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வழிகாட்டுதலின்படி மாவட்ட காவல்துறை சாலை விபத்து நடைபெறும் இடங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து சாலை மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாவட்ட கலெக்டரின் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டங்களில் விபத்து நடக்கும் மற்றும் நடக்க வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு அவ்விடங்களில் மேற்கொள்ள வேண்டிய சாலை பாதுகாப்பு கட்டமைப்பு நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி துறை மூலம் உரிய சாலைமேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விபத்துகள் குறைவடைந்து விபத்து மரண எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளன.
விபத்து அபாய பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் ஒளிரும் பட்டைகள், வேகத்தடைகள் உய மின்விளக்குகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சாலை அடையாளக் குறிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான எண்ணத்தை வலியுறுத்தி இதுவரை 512 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் அதிவேகமாக அஜாக்கிரதையாக மற்றும் ஸ்டண்ட் செய்து வாகனம் இயக்கும் நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக செயல்படுவதாகக் கருதப்பட்டு அவர்களை கண்டறிந்து உடனடி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்த வருடத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 பேர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காவல்துறையின் புள்ளி விவரங்களின்படி, 2024ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 143 விபத்து மரணங்கள் நடந்துள்ளன. 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 116 விபத்து மரணங்கள் நடந்துள்ளன. அதன்படி இந்த ஆண்டு மொத்தமாக 19 சதவீதம் விபத்து மரணங்கள் குறைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விபத்து இல்லா சமூகத்தை நோக்கி உறுதியாக பயணித்து வருகிறது. எனவே விதிகளை மதிப்போம் உயிர்களை காப்போம்! உங்கள் பாதுகாப்பே எங்கள் பிரதானக் கடமை!.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.