
லாகூர்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக தோல்வி கண்டதால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. அந்த அணி கடந்த ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைகளிலும் லீக் சுற்றை தாண்டவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியை அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியடையும் என்பது ஏற்கனவே தெரியும் என்பதால் அதில் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. உலகம் எங்கும் எல்லா அணிகளும் 6 பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடும் நிலையில், உங்களால் சரியான 5 பவுலர்களை கூட தேர்வு செய்ய முடியாதா? இரண்டு ஆல்-ரவுண்டர்களை வைத்துக் கொண்டு மட்டும் செல்கிறீர்கள். பாகிஸ்தான் நிர்வாகம் முட்டாள்தனமாக செயல்படுகிறது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை.' என்று கூறினார்.