
சென்னை,
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19, 20-ந்தேதிகளில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 161 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு சமய் சிங் மீனா உள்பட 9 போலீசார் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் விஷ சாராயம் விற்பனை செய்வது, கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வந்த இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை சுப்ரீம்கோர்ட்டும் உறுதி செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, பரமசிவம் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டிக்கு என்ற கோவிந்தராஜுவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் இவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இவர்களிடம் இருந்து விஷ சாராய மாதிரிகள் பறிமுதல் செய்யப்பட்டு இவர்கள் தான் விற்பனை செய்து உறுதி படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மோசமான மற்றும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், இவர்களுக்கு எந்தவிதமான கருணையும் காட்டக்கூடாது. இவருக்கு எதிராக 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 8 மாதங்களுக்கு மேல் இவர்கள் சிறையில் உள்ளனர். தாமோதரன் உடல் ஊனமுற்றவர். விஜயா ஒரு பெண் என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஆகிய இருவருக்கும் தற்போது ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். பின்னர் இருவரின் மனுக்களை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இருவரின் மனுகளை திரும்ப பெற அனுமதி அளித்து ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதே வேளையில் பரமசிவம் மற்றும் விஜயா ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.