
சென்னை,
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள ஒற்றுமை பேரணியையொட்டி மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
இந்திய ராணுவத்தின் துணிச்சலையும், தியாகங்களையும் போற்றும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் ஒற்றுமை பேரணி நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு மெரினா டிஜிபி அலுவலகத்தில் இருந்து தொடங்கும் பேரணி, நேப்பியர் பாலம் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முடிவடையும். எனவே, மாலை 4 மணிமுதல் 6 மணி வரை அப்பகுதியில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, "திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி கொள்ளலாம். பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அண்ணாசாலை, தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.
அண்ணா சிலையிலிருந்து வரும் மாநகரப் பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு - ஜிபி சாலை - டவர் கிளாக் - ஜிஆர்எச் பாயிண்ட் -ராயப்பேட்டை நெடுஞ்சாலை - லாயிட்ஸ் சாலை - ஜம்புலிங்கம் தெரு - ஆர்.கே.சாலை - வி.எம்.தெரு, மந்தைவெளி - மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷை அடையலாம்.
இதேபோல், கிரீன்வேஸ் பாயின்ட்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை, டிடிகே சாலை, அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். மேலும், வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.