
ஸ்ரீநகர்,
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கியது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலையடுத்து எல்லை பகுதிகளில் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்காக நிவாரண முகாம்கள் ஜம்மு மற்றும் சம்பலில் அமைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் டிரோன் மற்றும் குண்டுகளை வீசி தாக்கியதையடுத்து சம்பா முகாமில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று அந்த முகாம்களை பார்வையிட சென்ற ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா அங்கிருந்த குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.