நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கே வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி தொண்டர்கள் கடிதம்

3 hours ago 1

நெல்லை,

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட கூட்டணியைப் போலவே, வரும் ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கும் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே கூட்டணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை அதைவிட அதிகமாக ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிகிறது. இதனால், அ.தி.மு.க.வினர் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த முறை பா.ஜ.க.வுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்தத்தில் அ.தி.மு.க. கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.

தென்மாவட்ட தொகுதிகளில் ஒன்றான நெல்லை தொகுதி எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வந்தது. தற்போதைய பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனே அ.தி.மு.க.வில் இருந்தபோதும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில், பா.ஜ.க. சார்பில் களம் இறங்கி வெற்றி வாகை சூடினார். தற்போது, சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் மட்டுமல்லாது, தமிழக பா.ஜ.க. தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியை உறுதி செய்துள்ளதால், இந்த முறையும் பா.ஜ.க.வுக்கே நெல்லை தொகுதி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அங்குள்ள அ.தி.மு.க.வினரை சோர்வடையச் செய்துள்ளது.

தற்போது, அங்கு நடைபெறும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திலும் இந்த எதிர்ப்பு குரல் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்படியே சென்றால், தென்மாவட்டங்களில் அ.தி.மு.க. செல்வாக்கை இழந்துவிடும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை மாவட்ட அக்கட்சி தொண்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிகள் அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். இந்த தொகுதிகளில் 2001-ம் ஆண்டு முதல் இன்று வரை அ.தி.மு.க. வீழ்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 25 ஆண்டு காலமாக எம்.எல்.ஏ.வாக 5 முறை போட்டியிட்டு 2 முறை படுதோல்வி அடைந்து அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பில், ஆதரவில் வாக்குகளை பெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர், கட்சி வளர்ச்சிக்கு தொண்டர்கள், பொதுமக்கள் நலன்களுக்கு, மாவட்ட வளர்ச்சிக்கு எந்தவொரு பணியும் செய்யவில்லை.

எம்.எல்.ஏ. தனது குடும்பம் மற்றும் தனது சாதி, உறவினர்களின், மைத்துனர்களின் நலனுக்காக மட்டுமே உழைத்து வருகிறார். பணத்தை, சொத்தை குவித்து வருகிறார். எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வருவதும் இல்லை. இரட்டை இலை சின்னத்திற்கு, தாமரை சின்னத்திற்கு வாக்களித்த நெல்லை, பாளையங்கோட்டை பொதுமக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தெருவில் நிற்கின்றனர். அ.தி.மு.க. அழிவுப் பாதையில் இருந்து வருகிறது. தொண்டர்கள் மிகமிக மோசமான பாதிப்பில் கஷ்ட நஷ்டத்தில் 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள்.

ஆகவே, தங்களின் (எடப்பாடி பழனிசாமி) பிறந்த நாளில் நெல்லை மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மிகமிக கவனமாக பரிசீலனை செய்து, நெல்லை, பாளையங்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை 2026 சட்டசபை தேர்தலில் நிறுத்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்ய ஆவணச் செய்ய வேண்டுகிறோம். 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால், இனி வரும் காலங்களில் நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளில் அ.தி.மு.க. கட்சியும், தொண்டர்களும் அழிந்து அ.தி.மு.க. நெல்லையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையை ஒட்டிய தொகுதியான பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. அக்கட்சி சார்பில் எப்போதுமே சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டு வருகிறார். முன்னாள் அமைச்சர் மைதீன்கான் ஏற்கனவே அந்தத் தொகுதியில் களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

தற்போது, அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அந்தத் தொகுதியில் அரசு ஊழியர்கள் அதிகம் வசிப்பதால், தி.மு.க.வுக்கே அதிக வாக்குகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அந்தத் தொகுதியையும் இந்த முறை அ.தி.மு.க.வுக்கே ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அங்குள்ள அரசியல் நிலையை வைத்து பார்க்கும்போது, இப்போதே நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே ஒரு இணக்கமான சூழ்நிலை நிலவவில்லை என்பது தெரிகிறது. 

Read Entire Article