
லாகூர்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான திங்கி விமான தளத்தில் இருந்து, மிராஜ் வி ரோஸ் என்ற போர் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்த்தில் விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டனர். வெகாரி மாவட்டம் ரட்டா திப்பா பகுதிக்கு மேலே பறந்தபோது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
சிறிது நேரத்தில் விமானம் அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. தரையை நோக்கி விமானம் பாய்ந்தபோது, அதில் பயணித்த பைலட்டுகள் இரண்டு பேரும் அவசர அவசரமாக வெளியே குதித்து பாராசூட் மூலம் தரையிறங்கியதால் உயிர்தப்பினர். லேசான காயம் அடைந்த அவர்கள் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பிரான்சின் மிராஜ்-5 போர் விமானத்தின் தரம் உயர்த்தப்பட்ட விமானமான மிராஜ் வி ரோஸ், 1970களில் பாகிஸ்தான் விமானப்படையில் இணைக்கப்பட்டு தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. மிக பழமையாக இருந்தபோதிலும், இந்த போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய அங்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.