பா.ம.க.வில் பரபரப்பு.. அன்புமணி ராமதாஸ் இல்லத்தில் இன்று பொறுப்பாளர்கள் கூட்டம்

5 hours ago 1

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில், செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதனால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும், பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இந்த சூழலில், கட்சியின் வளர்ச்சி பணிகள், பா.ம.க. உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட செயலாளர்களை, கடந்த மாதம் சென்னையில் 3 நாட்கள் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி கட்சியின் அடுத்தக்கட்ட பணிகள் தொடர்பாகவும் அவர் ஆலோசித்தார். அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை, கட்சியின் பொறுப்புகளில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டாக்டர் ராமதாசால் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் அதே பொறுப்பில் தொடர்வதற்கான அறிவிப்பை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு வருகிறார்.

நிர்வாகிகள் மாற்றம், புதிய நிர்வாகிகள் நியமனம் என பா.ம.க.வில் அரசியல் பரபரப்பு நிலவி வந்த சூழலில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கே நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சமீபத்தில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. புதிய நிர்வாக குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர். அதில், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பெயர் இடம் பெறவில்லை. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இதை கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி மறுத்தார்.

இந்த பரபரப்பான சூழலில், தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்கிடையில், சென்னையை அடுத்த பனையூரில் கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வந்த அன்புமணி ராமதாஸ், சென்னை தியாகராயநகர் திலக் தெருவில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல, தைலாபுரத்தில் இன்று நடக்கும் செயற்குழு கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Entire Article