
சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், மற்ற குழந்தைகள் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் நெஞ்சை பிளக்கும் வேதனை அளிக்கிறது.
இந்த ரெயில்வே கிராசிங் வாயிலை, ரெயில் வரும் முன்பாக, குறிப்பிட்ட காலத்தில் மூட வேண்டிய வாயில் காப்பாளர் , கடமையை மறந்து தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. வாயில் காப்பாளரின் அலட்சியத்தால், மூன்று குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் தவறுக்கு மத்திய அரசும், ரெயில்வே அமைச்சகமும் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய அரசு உயிரிழந்த குழந்தைகள் குடும்பங்களுக்கு தலா ரூ 5 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தேவையான உயர் சிகிச்சை செலவுகளை மத்திய அரசு ஏற்பதுடன், அவர்களது குடும்பங்களுக்கும் ரூ 25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.என தெரிவித்துள்ளார் .