
சென்னை,
முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மதங்களை அவதூறாக பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில், ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், இதற்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
அவர், இந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகனை நியமித்து உத்தரவிட்டார். இதன்படி இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் ஆஜராகி, பொன்முடி தன் கருத்தை தெரிவிக்கவில்லை. முன்பு ஒரு காலத்தில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
எனவே, இந்த பேச்சு குறித்து அளிக்கப்பட்ட புகார்களை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரித்து, முகாந்திரம் இல்லை என்று கூறி தகுந்த உத்தரவை பிறப்பித்து வருகின்றனர் என்றார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ''போலீஸ் அதிகாரிகளுக்கு தீர்ப்பு எழுதும் அதிகாரம் யார் கொடுத்தது? ஆரம்ப கட்ட விசாரணைக்கும், புலன் விசாரணைக்கும் வித்தியாசம் உள்ளது. கத்தியால் குத்தினால் ரத்தம் வராது என்று சொன்னதால், கத்தியால் வயிற்றில் குத்தினேன். துரதிருஷ்டவசமாக ரத்தம் வந்து அவன் செத்து விட்டான்.
இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. செய்துதான் காட்டினேன் என்று யாராவது சொன்னால், விட்டு விடலாமா? இது ஜனநாயக நாடு. சுமார் 146 கோடி மக்கள் வாழும் நாடு. அதனால் மைக்கை பிடித்தால் வாய்க்கு வந்தது போல பேசக்கூடாது. இதுபோன்ற நபரின் வாயை கட்டுப்படுத்ததான் இந்த ஐகோர்ட்டு விரும்புகிறது. 4 சுவர்களுக்குள் என்ன வேண்டும் என்றால் செய்யட்டும். பொது இடத்துக்கு வந்து விட்டால், ஒழுக்கமாக பேச வேண்டும். இந்த நாட்டில் என்ன நடக்கிறது. மைக்கை பிடித்து விட்டால் இஷ்டம்போல் பேசக்கூடாது.
இந்த நாட்டில், தன்னை ஒரு ராஜாவாக கருதி பொதுக்கூட்டத்தில் பேசக்கூடாது. நான் மட்டுமே இந்த உலகில் உள்ளேன் என்று நினைக்கக்கூடாது. நானும் இவர்களில் ஒருவன் என்ற மனப்பான்மையுடன் பேச வேண்டும். அதனால், புகாரை போலீசார் முடித்து வைத்து விட்டனர் என்று கூறி இந்த வழக்கை நான் முடித்து வைக்க மாட்டேன். சுமார் 124 பேர் பொன்முடி பேச்சு குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அவர்களது புகாரின் ஆரம்ப கட்ட விசாரணை நடத்த வேண்டும். புகார்தாரருக்கு சம்மன் அனுப்பி அவரது விளக்கத்தை பெற வேண்டும்.
புகாரை முடித்து வைத்தால், அதுகுறித்து புகார்தாரருக்கு முறையாக தெரிவிக்க வேண்டும். இவையெல்லாம் நடக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுக்கூட்டத்தில் பேசும் அரசியல் தலைவர்கள் யோசித்து பேச வேண்டும். இஷ்டம்போல் பேசினால், அதை இந்த ஐகோர்ட்டு வேடிக்கை பார்க்காது. பொன்முடி மீதான புகார்களை எப்படி விசாரித்து முடித்து வைக்கின்றனர் என்பதை பார்க்கிறேன்'' என்று கருத்து தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கை வருகிற ஆகஸ்டு 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.