
சென்னை,
வணிகர் தினத்தையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. விழாவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கிப் பேசியதாவது:-
நாங்கள் எப்போதும் வெறும் கையால் முழம் போட மாட்டோம். எத்தனை நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தலைவர்கள் வந்தாலும் எங்களுடைய களம் முற்றிலும் வேறானது. ஏ.சி. அறைக்குள் உட்கார்ந்துகொண்டு நாங்கள் அரசியல் செய்வதில்லை. சாதியவாதிகளோடும், மதவாதிகளோடும் எந்தச் சூழலிலும் கைகோர்க்க மாட்டோம். இதை வெளிப்படையாக அறிவிக்கிறோம். சராசரி அரசியல்வாதியை போல் திருமாவளவனை கணக்கு போடாதீர்கள். அது எந்த காலத்திலும் நடக்காது. நுழையக்கூடாது என்றால் நுழைவோம், நடக்கக்கூடாது என்றால் நடப்போம், பேசக்கூடாது என்றால் பேசுவோம், கூட்டம் போடக்கூடாது என்றால் மாநாடே நடத்துவோம். மதச்சார்பின்மையை பாதுகாக்க திருச்சியில் 31-ந் தேதி மாபெரும் பேரணியை நடத்துகிறோம்.
அ.தி.மு.க., விஜய், பா.ஜனதா என எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் நாம் கதவுகளை திறந்து வைக்கலாம். ஆனால், அவ்வாறு எந்த கதவையும் திறந்துவைக்கவில்லை. என்னுடைய 2 எம்.பி.யை அமித்ஷாவும், மோடியும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களா?. டெல்லியில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் என்னுடன் பேசினார். பா.ஜனதாவிற்கு அழைத்தார். பிரதமரிடம் நேரில் பேசலாம் என்றார். அவரிடம் அதெல்லாம் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு திரும்பி விட்டேன். மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெறுகிறோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெல்ல வேண்டும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதைவிட சனாதன சக்திகள் எந்த சூழலிலும் வலிமை பெற்றுவிடக்கூடாது. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் வீழ்த்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.