
சென்னை,
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவும், முதல்-மந்திரி தேர்வும் எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று, 3 முறை ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியை வீழ்த்தியது. டெல்லியில் பா.ஜ.க.வின் முதல்-மந்திரி யார்? என்பதைத்தான் ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் சாகிப் சிங் வர்மா மீதுதான் இருந்தது. இவர் இல்லையென்றால் விஜேந்தர் குப்தா அல்லது சதீஷ் உபாத்யாய் ஆகியோருக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காதவாறு, எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் 11 நாட்கள் 'சஸ்பென்சு'க்கு பிறகு 50 வயதான ரேகா குப்தா முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டார்.
யார் யாரெல்லாம் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டார்களோ அந்த மூவரே ரேகா குப்தாவின் பெயரை முன்மொழிந்தனர். ரேகா குப்தா இப்போதுதான் முதல் முறையாக டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான வந்தனா குமாரியை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாலும், 2015, 2020-ம் ஆண்டு தேர்தல்களின்போது அதே ஷாலிமார் பாக் தொகுதியில், அதே வந்தனா குமாரியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கிறார். டெல்லிக்கு கடந்த 1993-ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
இந்தியாவில் 28 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன. இதில் 15 மாநிலங்களில் பா.ஜ.க. அரசுகள் அமைந்திருந்தாலும் ரேகா குப்தா ஒருவர்தான் பெண் முதல்-மந்திரி. ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மம்தா பானர்ஜிக்கு அடுத்ததாக 2-வது பெண் முதல்-மந்திரியாக ரேகா குப்தாதான் இருக்கிறார். டெல்லி வெற்றியின் மூலம் நாட்டிலேயே அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்திருக்கிறது. மொத்தம் உள்ள 4,111 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜ.க. வசம் மட்டும் 1,634 பேர் இருக்கிறார்கள். அதாவது மொத்த எம்.எல்.ஏ.க்களில் 39.7 சதவீத பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள். டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா மாணவ பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு நெருங்கிய ஈடுபாடு கொண்டு, அந்த இயக்கத்தின் மாணவர் அமைப்பில் முக்கிய பங்கு வகித்தார்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக தொடங்கிய அவரது பயணம் 3 முறை டெல்லி மாநகராட்சி கவுன்சிலராகவும் ஆக வைத்தது. இப்போது அவர் பதவியேற்ற ராம் லீலா மைதானத்தில்தான் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினார். அரவிந்த் கெஜ்ரிவாலும் அங்குதான் முதல்-மந்திரியாக பதவியேற்றார். 6 பேர் கொண்ட மந்திரி சபையை ரேகா குப்தா அமைத்துள்ளார். இதில் அவர் வர்த்தகர் சாதியான பனியா சமுதாயத்தை சேர்ந்தவர். மற்றவர்கள் ஜாட், சீக்கியர், பஞ்சாபி இந்து, தலித், பிராமணர், தாகூர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஆக டெல்லியிலுள்ள அனைத்து சமுதாயத்துக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளார். 'முதல்-மந்திரியின் அலுவலக அறை வாசல் மக்களுக்காக திறந்தே இருக்கிறது' என்று சொல்லும் ரேகா குப்தாவின் அரசில், வளர்ச்சி அடைந்த டெல்லியை உருவாக்குவதே என்னுடைய முதல் பணி என்று கூறியிருக்கிறார். அவரது ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.