
நெல்லை,
மத்திய அரசு மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்படும் என தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் பரவின.
இதனால் மாநகரில் உள்ள தபால் நிலையங்கள், பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தெற்கு புறவழிச்சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு தி.மு.க. நிர்வாகிகள் சிலர் வந்தனர். அவர்கள் அங்கு தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் எழுதப்பட்ட பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை வைத்து அழித்து 'தமிழ் வாழ்க' என்று எழுதி கோஷமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெயர் பலகையில் உடனடியாக மஞ்சள் நிற வா்ணம் பூசப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக அத்துமீறி நுழைதல், பொது அறிவிப்புகளை சேதப்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் திமுக நிர்வாகிகள் 6 பேர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.