சாம்பியன்ஸ் டிராபி: அணியில் என்னுடைய வேலை இதுதான் - ஆட்ட நாயகன் விராட் கோலி பேட்டி

3 hours ago 1

துபாய்,

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் ஷகீல் 62 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற விராட் கோலி அளித்த பேட்டியில், "அரையிறுதி வாய்ப்பை பிடிப்பதற்கான இந்த முக்கியமான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது நல்ல உணர்வை கொடுக்கிறது என்று உண்மையை சொல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே நாங்கள் ரோகித் சர்மா விக்கெட்டை இழந்ததால் கடந்த போட்டியில் கற்றப் பாடங்களை வைத்து பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மிடில் ஓவர்களில் அதிகப்படியான ரிஸ்க் இல்லாமல் போட்டியை கடைசி வரை கட்டுப்படுத்துவதே அணியில் என்னுடைய வேலை.

ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடி சில பவுண்டரிகளை அடித்தார். அது என்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியது. என்னுடைய ஆட்டத்தை புரிந்துள்ள நான் விமர்சனங்களை வெளியே வைத்து எனது இடத்திலிருந்து என் ஆற்றல் மற்றும் சிந்தனைகளை கவனித்துக் கொள்கிறேன். களத்திலிருந்து என்னுடைய அணிக்காக உழைப்பதே எனது வேலை. கீழே விழும் நேரங்களில் எனக்கு நானே ஒவ்வொரு பந்திலும் 100 சதவீதம் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று சொல்லி கொள்வேன். அதற்கு கடவுள் பரிசைக் கொடுத்துள்ளார்.

பந்தில் வேகம் எங்கு இருக்கிறது என்பதைப் புரிந்து செயல்படுவது முக்கியம். இல்லையெனில் ஸ்பின்னர்கள் வேலையை காட்டி விடுவார்கள். அப்ரிடியை கில் நன்றாக எதிர்கொண்டார். அதனாலேயே அவர் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கிறார். பவர்பிளேவில் 60 - 70 ரன்கள் எடுப்பது முக்கியம். இந்தியாவைப் போல நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் துபாயிலும் அசத்துகிறார். 36 வயதானாலும் ஒவ்வொரு போட்டியிலும் முழுமையான பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

Read Entire Article