கான்பூர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி அமேதி மற்றும் ரேபரேலிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை செவ்வாயன்று தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் முதல் முறையாக அமேதி வந்த ராகுல்காந்தி முன்ஷிகஞ்சில் உள்ள ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்.
மேலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள இந்தோ-ஆசிய ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் பிரிவையும் ராகுல் பார்வையிட்டார். இரண்டு ஆலைகளிலும் இப்போது துப்பாக்கி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் சஞ்சய்காந்தி மருத்துவமனைக்கு சென்ற அவர் சுமார் ரூ.3.5கோடி செலவில் கட்டப்பட்ட புதிய இதயப் பிரிவை திறந்து வைத்தார். புதிய ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்திரா காந்தி நர்சிங் கல்லூரியையும் ராகுல் ஆய்வு செய்தார்.
பின்னர் கான்பூர் சென்ற ராகுல்காந்தி, ஜம்முவின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான 26 பேரில் ஒருவரான உத்தரப்பிரதேசம் கான்பூரை சேர்ந்த இளம் தொழிலதிபர் சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்தித்தார். 23ம் தேதி நடந்த இவரது இறுதிச்சடங்கில் உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் கலந்து கொண்டார். இந்நிலையில் ராகுல்காந்தி, நேற்று சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்தித்தார். கான்பூர் வந்த ராகுல்காந்தி இங்குள்ள சுபம் திவேதியின் வீட்டிற்கு சென்றார். அங்கு மறைந்த சுபம் திவேதிக்கு அஞ்சலி செலுத்திய ராகுல், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
* ராகுலுக்கு எதிராக போஸ்டர்கள்
ராகுல்காந்தி நேற்று அமேதிக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக காங்கிரஸ் அலுவலகம் மற்றும் உள்ளூர் பேருந்து நிலையம் உட்பட நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் ராகுலுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. தீவிரவாதியின் ஆதரவாளர் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இது அரசியல் பதற்றத்தை தூண்டுவதாக இருந்தது. ராகுல் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தபோதிலும் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த செயலுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானவரின் குடும்பத்துடன் ராகுல்காந்தி சந்திப்பு appeared first on Dinakaran.