கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் புர்ராபஜாரின் நெரிசலான மெச்சுபட்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் ஓட்டலில் பணியாற்றியவர்கள், அறையில் தங்கியிருந்தவர்கள், உணவு சாப்பிட வந்தவர்கள் உட்பட பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
தகவலறிந்த தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் கடும் புகை காரணமாக மூச்சுத் திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அடுத்துள்ள ஜோதிவடத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரபு (40) என்பவரின் மகள் தியா (10), மகன் ரிதன் (3) மற்றும் இவரது மாமனாரான சென்னை அடையாறை சேர்ந்த சமையல் காண்ட்ராக்டரான முத்துகிருஷ்ணனும் (61) ஆகிய மூவரும் பலியானார்கள். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2லட்சம் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி, தீ விபத்து சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு முழுவதும் மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளை நான் காண்காணித்தேன். ஒட்டலில் எரிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார். மேற்கு வங்க அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கொல்கத்தா ஓட்டலில் தீ விபத்து தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் பலி appeared first on Dinakaran.