கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அடுத்துள்ள ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு (40). கற்றாழையை மூலப்பொருட்களாக கொண்டு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலை மேற்கொண்டு வரும் இவர், இவரது மனைவி மதுமிதா, மகள் தியா (10), மகன் ரிதன் (3) ஆகியோருடன் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றார். இவரது மாமனாரான சென்னை அடையாறை சேர்ந்த சமையல் காண்ட்ராக்டரான முத்துகிருஷ்ணனும் (61) உடன் சென்றிருந்தார். அங்கு கொல்கத்தா நகரின் மைய பகுதியில் படாபஜார் பகுதியில் உள்ள 5 மாடிகள் கொண்ட தனியார் ஓட்டல் ரிதுராஜில் குடும்பத்துடன் பிரபு தங்கி இருந்தார்.
இந்நிலையில், மாமனார் முத்துகிருஷ்ணன் மற்றும் 2 குழந்தைகளுக்கு டிபன் வாங்குவதற்காக நேற்றுமுன்தினம் இரவு பிரபு, தனது மனைவி மதுமிதாவுடன் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றார். அப்போது ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அது மளமளவென பரவியதால் புகைமண்டலமாக பரவியது. இதையடுத்து அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். அப்போது முத்துகிருஷ்ணன், மருமகன் பிரபுவுக்கு உடனடியாக போன் செய்து ஓட்டலில் தீப்பிடித்ததாக கூறியுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர், 2குழந்தைகளையும் அழைத்து கொண்டு ஓட்டலின் மேல்பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது புகைமூட்டம் காரணமாக 3 பேரும் ஓட்டல் அறையை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. இதில் முத்துகிருஷ்ணன், தியா, ரிதன் ஆகியோர் ஓட்டல் அறைக்குள்ளே மூச்சுத்திணறி உடல் கருகி உயிரிழந்தனர். கொல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றபோது தங்கியிருந்த ஓட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கரூர் கலெக்டர் தங்கவேல் உத்தரவின்பேரில் கோட்டாட்சியர் முகமது பைசல், தாசில்தார் குமரேசன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஜோதிவடம் சென்றனர். பின்னர் அங்கு உறவினர்களை சந்தித்து பேசினர். தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக அவர்களிடம் கூறினர். இந்த விபத்து குறித்து ஜோதிவடத்தை சேர்ந்த 2 குழந்தைகளின் பெரியம்மா சாந்தினி கூறுகையில், ‘உறவினர் ஒருவரின் திருமண விழாவிற்காக பிரவு குடும்பத்தோடு சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று இருந்தார்.
பின்னர் அங்கிருந்து சுற்றி பார்க்கும் வகையில் 5 பேரும் கொல்கத்தா சென்றனர். பின்னர் அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த போது விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் எங்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு , 3 பேரின் உடல்களையும் கரூர் மாவட்டம் ஜோதிவடத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.கரூர் தாசில்தார் குமரேசன் கூறுகையில், ‘கொல்கத்தாவில் நடைபெற்ற தீ விபத்தில் 3 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து ஜோதிவடம் சென்று உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம்.
3 பேரின் உடல்கள் கரூர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கேட்டுக்கொண்டனர். கலெக்டர் ஏற்பாட்டின் பேரில், இறந்தவர்களின் உடல் கரூர் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) மாலை கொல்கத்தாவில் போஸ்ட்மார்டம் முடிவடைந்துள்ளது. நாளை (இன்று) மாலைக்குள் 3 பேரின் உடல்களும் கரூர் வந்து விடும்’ என்றார்.
The post சென்னை தொழிலதிபர், பேரன், பேத்தி பலியான சோகம்: உருக்கமான தகவல் appeared first on Dinakaran.