
புதுடெல்லி,
காஷ்மீரில் அப்பாவி மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள்நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளுக்கு கனவில்கூட நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை பெற்றுத்தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் ஒருபுறம் மேற்கொண்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ராஜ்ஜிய ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா அதிரடியாக அறிவித்தது.
சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவு, வணிகத்தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தை மீறுவோம் என்றும், இந்திய கப்பல்கள் பாகிஸ்தான் துறைமுகத்துக்குள் நுழைய தடை என்றும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது.அதே நேரம் இந்திய எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடுகளை நடத்த தொடங்கினர். அவர்களுக்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பகீர் குற்றச்சாட்டை ஒன்றை கூறியுள்ளார். அதில், பாகிஸ்தானுக்கு எதிராக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும் காங்கிரஸ் துணை நிற்கும். பஹல்காம் தாக்குதல் நடக்கப்போவதாக பிரதமர் மோடிக்கு 3 நாட்களுக்கு முன், புலனாய்வு தகவல் கொடுக்கப்பட்டது. முன்னரே அறிந்ததால்தான் காஷ்மீர் பயணத்தை பிரதமர் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை நான் செய்திதாளில் படித்து அறிந்துகொண்டேன். பிரதமர் தனது உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை, காஷ்மீரில் பாதுகாப்பை ஏன் பலப்படுத்தவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.